சைவசித்தாந்தம் நிலைநிறுத்திக் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களில் உண்மையில் முதன்மை பெற்றதாகவும் அனைத்திலும் மேன்மையானதாகவும் விளங்குவது பதிக் கொள்கையாகும். இவ்வாறு விளங்கும் பதிக் கொள்கையில் சக்திக்குத் தனிச்சிறப்பு உண்டு. சைவசித்தாந்தத்தில் இறையருள் எனப்படும் திருவருளே சக்தி எனப்படுகின்றது. அந்த வகையில் இச் சக்தியைப் பெண்ணாகக் கொள்வது சித்தாந்தத்தின் மரபாகும். அதனாலேயே சித்தாந்த மரபில் இறைவனின் திருவருட் சக்திகளாக உமை, கௌரி, காளி, பிராஹ்மி, மஹேஷ்வரி… முதலான பல பெண் சக்திகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருளாகும். இதனால் சக்தியின் உண்மைத் தன்மை பற்றிய சிந்தனையாக சக்தி தத்துவம் என்பதைக் கொள்ளலாம். ‘சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசக்திக்கு இடமாக சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தியே சக்தி தத்துவம்’ என்றும் கூறுவர் அறிஞர்.
சிவம், சக்தி என்பன இரண்டு சொற்களாக இருந்தாலும், சித்தாந்த நோக்கில் இவை இரண்டும் சிவ பரம்பொருளை இரு நிலைகளில் குறிப்பதாக அமைகின்றது. ஒன்றிலும் தோய்வின்றிச் சுயம்பிரகாசமாய் நிற்கும் நிலையில் பரம்பொருளை ‘சிவம்’ என்றும், அதே சிவம் உயிர்களுக்குப் பொதுவகையில் உதவி செய்ய முற்படுகையில் ‘சக்தி’ எனப் பெயர் பெறுகின்றது. எனவே, உயிர்களுக்கு உதவும் முதல்வனது உருவத்திருமேனி அருள்வடிவம் என்பது சித்தாந்திகளின் கருத்தாகும்.
திருவருள் எனப்படும் சக்தியும் அதன் கூறுகளுமே இறைவனுக்குக் குணமும், சொரூபமும் மற்றும் உடம்பு, இடம், ஆடை, அணி முதலியனவும் ஆகும்.
சைவசித்தாந்தம் இறைவனின் சக்தியை அருள் என்று குறிப்பிடுகின்றது. அருள் என்ற சொல் மிகவும் ஆழமான பொருளைக் கொண்டது. ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கேற்றவாறும், பயன்படு தன்மைக்கேற்பவும் கொண்டு இறைவனிடத்திலுள்ள பிரிவற்ற இயல்பாகிய கருணையாக விளக்கி அதனை அருட்சக்தி என்கின்றனர். இச் சக்தி சிவனுக்கு அபின்னமாய் இருப்பது. சித் சக்தி என்றும் இதன அழைப்பர். சித் என்பது ஞானம். எனவே, சித்சக்தி என்பது ஞானசக்தி எனப்பொருள் கொள்ளப்படும்.
இறைவன் தானே நேரில் நின்று ஐந்தொழில்களை இயற்றாமல், தன் ஆற்றலாகிய சக்தியின் துணைக் கொண்டே இவற்றை இயற்றுகின்றான். தன் நிலையில் எவ்வித விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவன், ஞானமே வடிவாகியவன். இவன், உயிர்கள் ஆணவ மறைப்பிற்கு உள்ளாகி இருப்பதால், அவற்றிற்கு அறிவு விளக்கம் செய்யும் பொருட்டு தன் நிலையிலிருந்தும் கீழிறங்கி வரவேண்டியுள்ளது. எனவே, தன் நிலையில் எவ்விதக் குறையும் ஏற்படாமல் ஐந்தொழிலைச் செய்தற்காய் தான் நேரடியாக நின்று இவற்றைச் செய்யாமல், தன் குணமாகிய அருளைக் கொண்டு செய்கின்றான். இதனை அப்பர் சுவாமிகள்,
“மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்”
“மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்”
என்கின்றார். இதனையே சித்தாந்திகளின்பால், திருக்களிற்றுப் படியார்,
“தாரத்தோடு ஒன்றாவர் தாரத்துஓர் கூறாவர்
தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் – தாரத்தின்
நாதாந்தத் தேஇருப்பர் நல்தானத் தேஇருப்பர்
வேதாந்தத் தேஇருப்பர் வேறு”
சிவனும் சக்தியும் உயிர்கள் உய்வதற்காகப் படைத்தலின்போது நாயகன் நாயகியாக ஒன்றுபட்டிருப்பர். உயிர்கள் ஆண், பெண்ணாகி வாழ்வதற்கு முன் தாமே மங்கைமங்கனாக (அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில்) இருப்பர். உயிர்களுக்கு மலசம்பந்தம் நீக்குவதற்காக தத்துவங்களைத் தன் சக்தியினால் உருவாக்கி அவற்றைத் தொழிற்படுத்த அவற்றுக்கு மேம்பட்டு நிற்பர். இந் நிலையில் சக்தியானவள் தத்துவங்களிற்குச் சார்பாக நிற்பாள். வினைகளால் களைத்த உயிர்களுக்கு இளைப்பாற்றல் செய்வதற்காக விந்து என்ற சக்தியாகவும், நாதம் என்ற சிவமாகவும் நிற்பர். அவ்வாறே வேள்வி பூஜைகளிலும், தியானம் செய்யும் இடங்கள் ஆகியவற்றிலும் ஆறாதாரங்களிலும் என எங்கிலுமே சக்தியோடே சிவன் இருப்பார். ஈற்றில் வீடுபேறு அருளுவதற்காக வேதத்தைப் பற்றி அதன் நாத முடிவிலே இருப்பார்; என்கின்றது.
இதனைச் சித்தாந்திகள் விளக்குமிடத்து, சிவ பராக்கிரம் எனும் பஞ்ச கிருத்தியத் தொழிலை இறைவன் ஆன்மாக்களின் பொருட்டு நிகழ்த்துதற்கு உமையே காரணமாக அமைகின்றாள். அதாவது, ஆன்மாக்களை அநாதியாகத் தொடர்ந்துள்ள பாசத்தைப் போக்கி, அவை முக்தியடைதற் பொருட்டு அருள்வடிவமாகிய அம்மையார், அடியார்களுக்குப் பஞ்சாக்கர வடிவமாகிய ஆனந்தத் திருநடனத்தை இறைவனின் இடப்பாகத்திலிருந்து தரிசிப்பார் என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக